பக்கங்கள்

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஆன்மீக உயிர்ச்சக்தியும் அறிவியல் விஞ்ஞானமும்

இந்து மதம் காலம் கடந்து நிற்கும் ஒரு அற்புதக் கருவூலமாகும். எண்ணிக்கணிக்க முடியாத பல்வேறு அற்புதங்களும், அதிசயங்களும், உண்மைகளும் நிறைந்து கிடக்கின்றன. இதில் கூறப்படும் ஒவ்வொரு சொல்லிலும் உலகின் இயக்கமே உள்ளடங்கியிருக்கின்றது. இன்றைய காலத்தில் உலகின் மிகப்பெரும் ஆள்சக்தியாக விளங்கும், ‘அறிவியல் விஞ்ஞானம்’ இற்றைக்கு சுமார் 3நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே தோன்றியதாகும். பல்வேறு புதுமைகள் படைத்து, மனிதனின் செயற்பாட்டில் தன்னையும் உள்நுழைத்து அரிய பலவற்றையும் செய்து வருகின்றது. இத்தகைய விஞ்ஞானமும், மேலைத்தேய அறிவியலும் தோன்றிய காலகட்டத்திற்கு ‘எத்தனையோ மடங்கு காலத்திற்கு முன்பே’ தோன்றிவிட்ட இந்துமத சிந்தனைகள், நவீன விஞ்ஞான அறிவியல் கூறாத எத்தனையோ விடயங்களை எண்ணிக்கூடப் பார்க்க முடியாத அளவில் கூறிவிட்டுள்ளமை என்பது யாவரும் அறிந்ததுவே. இறைவனையே முதற்பொருளாகவும் அனைத்துமாகவும் கொண்டு கூறும் இந்து மதத்தின் கோட்பாடுகளில், அணுவை காரணம் காட்டி விளக்கங்களை முன்வைக்கும் விஞ்ஞானத்தின் அத்தனை அம்சங்களுமே அடங்கிவிடுகின்றன என்பது நிதர்சனம்.

உள்ளிருக்கும் சிவமாகிய ஜீவனுடன் பேராற்றல் ஆகிய சக்தி சேர்ந்தால் தான் இயக்கம் நடக்கும். அதாவது, “சக்தி இன்றி சிவம் இல்லை. சிவம் இன்றி சக்தி இல்லை” என்பர். அந்த சக்தி இயங்குவதற்கு அதாவது, பஞ்ச பூதங்களாலாய இந்த உடல் இங்குவதற்கு அதை தானாக நின்று இயக்கும் ஒரு இயக்கி – சிவன் தேவை. அதாவது, சீவன் தேவை. இந்த உடல் அழிந்தவுடன் அல்லது இல்லை என்றவுடன் உள்ளிருக்கும் சீவனை அல்லது ஆன்மாவை நாம் காண்பது என்பதோ அல்லது அந்த ஆன்மா இயங்குவது என்பதோ கிடையாது. அவ்வாறே, இந்த சிவனும், சக்தியற்ற நிலையில் வெறும் இருப்பாய் மாத்திரம் இருக்கும். அதுபோன்றே, சீவனற்ற உடல் - உயிரற்ற உடல், சடம் எனப்பெறும். அதுவரை பல பெயர்களால் குறிப்பிடப்பட்டு வந்தது, உயிரற்ற மாத்திரத்திலேயே ‘பிணம்’ என்றும், ‘சவம்’ என்றும் அஃறிணைப் பொருளில் வழங்கப்பெறும். சக்தியும் சிவனற்ற நிலையில் வெறும் சடமாகிவிடும். எனவே, சவத்தைச் சிவமாக்க ஒரு விசிறி தேவை போல், இந்த மனிதப் பிறவியில் நாம் செய்யும் கர்மங்களும், எமது வினைகளும் அவற்றிற்கான பயன்களும் எம்மைச் சிவமாக்கவும், அல்லது சவமாக்கவும் கூடும் என்பதை உணர்ந்து, இவற்றையும், இவற்றிற்கான நெறிகளையும் தெளிவுபடுத்தியோராக சித்தர்பெருமான்கள் விளங்குகின்றனர்.

மேலை அறிவியல், எந்தவொன்றினதும் இயக்கத்திற்கு ‘சக்தி’ – Power என்ற ஒன்றை அடிப்படையாகக் காட்டுகின்றது. நிலைச்சக்தி, இயக்கசக்தி என்பவற்றின் அடிப்படையில் ஒரு பொருளின் இயக்கம், வேகம், தன்மை என்பவற்றை கணிக்கும் போது, அங்கு அப் பொருளின் தன்மை, திணிவு, புவியீர்ப்பு, நேரம், பிரயோகிக்கப்படும் விசை முதலிய பல விடயங்கள் பற்றிப் பேசப்படுவதைக் காணலாம். எனவே, இவ்விரு துறைகளிலும் அதாவது, இந்து மெய்யியலிலும், மேலைத்தேய அறிவியலிலும் கூறப்படுகின்ற இயக்கம் பற்றிய செய்திகளின் அடிப்படை வாயிலாக பல்வேறு தொடர்புகள் இருப்பதனைக் காணமுடிகின்றது.

இறைவனை அறிவே உருவானவன், ஜோதி வடிவானவன், ஆயிரம் சூரியனிலும் பிரகாசம் மிக்கவன்…என்று பலவாறாகச் சிறப்பிக்கப்படுகின்றான். விஞ்ஞானம் இப் பிரபஞ்ச இயக்க சக்தியை மின்சாரம், வெப்பம், ஒளி, ஒலி என்றும் பலவாறாகக் கூறுகின்றது. அதாவது, ஒரு சக்தியின் அலை நீளத்தைப் பொறுத்து அதனுடைய அதிர்வெண்ணை நிர்ணயிக்கின்றது. இவ் அதிர்வெண் மாறுபடும்போது அச் சக்தியின் பண்புகளும், தன்மையும் மாறுபடுகின்றது. இதுபோன்றே இறைவனும் உயிர்களின் தன்மைக்கேற்ப, அவற்றின் வினைப் பயன்களுக்கேற்ப தணு, கரண, புவன, போகங்களைப் படைக்கின்றான். விஞ்ஞானம் கூறும் அணு என்பது எங்கும் நிறைந்தது. இந்தப் பொருளில் இருக்கும், இதில் இருக்காது என்று கூறிவிட முடியாது. ஆக்க முடியாதது. அழிக்கவும் முடியாதது. ஆனால், இன்னொன்றாக மாற்றிவிட கூடியது. இறைவனோ, காணுமிடமெங்கினும் நீக்கமற நிறைந்து நிற்பவன். பிறப்பும், இறப்பும், கூடவே மூப்பும் அற்றவன். அனைத்தையும் படைத்து, காத்து இறுதியில் தன்னுள்ளே அனைத்தையும் ஒடுக்கிக் கொள்பவனும், அழிப்பவனும் அவனே. அவனை தூணிலும், துரும்பிலும் காணலாம். பெரியவற்றுள் எல்லாம் பெரியவன், சிறியவற்றுள் எல்லாம் சிறியவன்.

இத்தகைய நிலையில் விந்தைகள் நிறைந்த உடம்பினுள் நிறைந்த நின்று அவ்வுடலை இயக்குவது எது என்ற வினா எழுவது இயல்பு. மெய்ஞானமோ இதற்கு சீவன் - ஆன்மா என்று பதில் தர விஞ்ஞானமோ இன்னமும் சரியான பதிலைத் தரமுடியாது சமாளித்துக் கொண்டிருக்கின்றது. ஒட்சிசன் வாயுவே உயிர்வாழ்வதற்கு அடிப்படை என்கின்றது. அந்த உயிர் எதனால் ஆனது என்பதற்கு பதில் விஞ்ஞானத்திடம் இல்லை. கண்ணால் காணவும், காதால் கோட்கவும், தொட்டு உணரவும் முடியாத பிரம்மமே சீவன்களாகத் தோற்றுகின்றார் எனும் மெய்ஞானத்தின் விளக்கத்தையும் உறுதியாய் ஏற்கும் தன்மையும் இல்லை. இவ்வாறு இருக்க, இந்த உயிர்ச்சக்தியை உலகின் கண் வாழும் அனைத்து மக்களும் ஏதோ ஒரு வகையில் தெரிந்தும், அறிந்தும் வைத்திருந்துள்ளனர். தத்தம் அறிவுக்கும், மொழிக்குமேற்ப பல்வேறு பெயர்களைச் சூட்டி இவற்றை அழைத்தனர். இந்துக்கள் அனைவரும் சிவம், பிராணன், சீவன் என்றும், எகிப்தியர்கள் ‘கா’ என்றும், சீனர்கள் ‘ஹீ’ என்றும், கிரேக்கர்களும் ரோமர்களும் ‘ஈதர்’ என்றும் பலவாறாக அழைக்கின்றனர். அதுபோலவே, ஜெர்மன் நாட்டு அறிஞர் ஹானிமன் ‘ஆதார சக்தி’ என்றும், டாக்டர். மெஸ்மர் (மெஸ்மரிசத்தை கண்டுபிடித்தவர்) ‘விலங்குகளின் காந்த சக்தி’ என்றும், இது பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் ரஷ்ய விஞ்ஞானிகள் ‘பயோ பிளாஸ்மிக் எனர்ஜி’ (Bio Plasmic Energy) என்றும் அழைக்கின்றனர். இவை தவிர, இதற்கு ‘எல்-பீல்டு’, ‘விட்டல் எனர்ஜி’, ‘பிளாஸ்மிக் எனர்ஜி’ எனவும் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு எத்தனையோ பெயர்களில் எத்தனை பேர் கூறினாலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பேயே எமது இந்து மதத்தின் வழித்தோன்றல்களாக வந்த சித்தர்களும், ஞானியர்கள், ரிஷிகள் முதலிளோர் பலர் தமது அனுபவ ஞனத்தினாலும், ஆன்ம சாதனையினாலும், புற உலகினைக் கடந்து – அக உலகிட் புகுந்து எண்ணரிய பல அற்புத விடயங்களை அறிந்ததோடு மட்டுமல்லாமல் அவற்றை பிறர்க்கும் பயன்படும் வண்ணம் வெளிப்படுத்தியும் சென்றிருக்கின்றார்கள்.
ஆறாதாரங்கள்

மனித உடலில் காணப்படும்
   01. மூலாதாரம்


   02. சுவாதிஸ்டானம்


   03. மணிபூரகம்


   04. அனாஹதம்


   05. விசுத்தி


   06. ஆக்ஞை
                                    எனும் ஆறுடன்


  07. சகஸ்ராதாரம்
 


என இவ் ஏழு ஆதாரங்களைப் பற்றிப் பேசாது எந்தவொரு ஞானியரும் தம் மொழி உரைத்ததில்லை.


     குண்டலினி யோகம் எனும் ஓர் அற்புதக் கலையினை ஊற்றெடுக்கச் செய்வதற்கு அடிப்படைகளாகவும், ஆதாரமாகவும் அமைவது இவ் ஆதாரங்களே எனலாம். திருமூலரின் திருமந்திரத்தில் இவற்றை மேலும் விரிவாகக் காணலாம்.

குண்டலினி எனும் சக்தி முள்ளந்தண்டுப்பகுதியில் தலைகீழான பாம்பு வடிவில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. இதை ஆன்ம சாதனைகளின் மூலம் எழுப்புவதால் அரிய பல சக்திகளைப் பெற்றுக் கொள்ள முடியும், சித்துக்கள் பலவும் சித்தியாகும், அட்டமா சித்திகளும் வசமாகும். இத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த ஆறு ஆதாரங்களும் அவற்றுடன் ஆயிரம் இதழ் தாமரையாக விளங்கும் சகஸ்ரதளத்துடன் சேர்த்து ஏழு ஆதாரங்களையும் பற்றி நோக்கும் போது, இவற்றோடு மருத்துவ ரீதியில் எத்தகைய தன்மைகள் காணப்படுகின்றன என்பதை மேற்கொண்டு நோக்கலாம்.

மனித உடலில் எண்ணற்ற சக்தி மையங்கள் காணப்படுகின்றன. இவை பிராணனின் சக்தியைச் சேமித்து வைத்து தேவைக்கேற்ப வழங்குகின்றன. இவற்றுள் மிக முக்கியமானவையாகக் கூறப்படுவதே மேற்சொன்ன ஏழு ஆதாரங்களுமாகும். சக்கரங்கள் என்றும் சொல்லப்படும் இவை, உடலில் கீழிருந்து மேலாக ஒழுங்கில் அமைந்துள்ளன. அதாவது, இடங்கலை, பிங்கலை எனும் இடது (சந்திர நாடி), வலது (சூரிய நாடி) நாடிகள் தண்டுவடத்தை குறுக்காக சந்திக்கும் 6 இடங்களில் இவை அமைந்துள்ளன. முள்ளந்தண்டின் அந்தப் பகுதி, அடிவயிறு, தொப்பூழ், மார்பு, தொண்டைக்குழி, நெற்றிப்பொட்டு என்பவற்றின் நேர்பின்புறமாக முள்ளந்தண்டிலும், ஏழாவது ஆதாரம் மூளையின் மேல்நடுவில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர்போலவும் விளங்குகின்றது. இச் சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நாளமில்லா சுரப்பிகளுடன் இணைப்புடையதாய் விளங்குகின்றது. ஒவ்வொன்றும், அது அமைந்துள்ள பகுதியில் உள்ள உள்ளுறுப்புகளோடு தொடர்புகொண்டுள்ளது. இத்தகைய சக்கரங்களில் ஏற்படுகின்ற கோளாறுகள், தடைகள் என்பனவே உடலிலும், உள்ளிலும் ஏற்படுகின்ற நோய்களுக்கும், மற்றபிற பாதிப்புகளுக்கும் காரணமாக அமைகின்றது. இத்தகைய தன்மையைத் தவிர்த்து, நோய்களிலிருந்தும், பாதிப்புக்களிலிருந்தும் நீங்கி உடலையும் உறுப்புக்களையும் சிறப்பாகச் செயற்படச் செய்ய இயமம், நியமம், பிராணாயாமம்… முதலிய அட்டாங்க யோகங்களும் சிறப்பாக யோகாசனம், தியானம் என்பவையும் கொள்ளப்படுகின்றன. இவை, இச் சக்கரங்களை சீராக இயக்கவும், தூண்டிவிடவும் மிகுந்த பயன்பெறுகின்றன.

நவீன மருத்துவத்தில் கூறப்படுகின்ற பல்வேறு உடற்குறைபாடுகளிற்கு இச் சக்கரங்கள் காரணமாக அமைகின்றன என்பது ஆன்மீக ஆராய்ச்சியின் பால் வெளிவந்த உண்மையாகும். இந்த சக்கரங்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பை இந்து சமயம் தெளிவாகக் காட்டி அக்கிரகங்களின் இயக்கத்தோடு இவ் ஆதாரங்களை அவற்றின் இயக்கங்களை விரித்துரைக்கின்றது. ஒவ்வொரு ஆதாரங்களும் வானவில்லில் குறிப்பிடப்படுகின்ற ஒவ்வொரு நிறங்களை தம்முடையதாகக் கொண்டு விளங்குகின்றன.

01. மூலாதாரம், இது செவ்வாய் கிரகத்தால் இயக்கப்படுவது. சிவப்பு நிறமுடையது. தண்டுவடம், சிறுநீரகம், ஆகிய உறுப்புக்களை இதுவே செயற்படுத்துவது. அதிரினல் எனப்படும் நாளமில்லாச் சுரப்பியை இயக்குவதுடன் தான் பாதிக்கப்பெறும் போது முதுகு, தண்டுவட நோய்கள், அதிரினல் சுரப்பி நோய்கள் என்பவற்றை ஏற்படுத்துகின்றது.

02. சுவாதிஸ்டானம், இதை புதன் இயக்குகிறது. செம்மஞ்சள் நிறமுடையது. இனப்பெருக்க உறுப்புகளுடன் அதனோடு தொடர்புடைய நாளமில்லாச் சுரப்பிகளையும் இச்சக்கரம் இயக்குகின்றது. இதனில் ஏற்படும் பாதிப்பால் பாலியல் தொடர்பான குறைபாடுகள் ஏற்படுகின்றது.

03. மணிபூரகம், சூரியனின் இயக்கத்திற்கு உட்பட்ட இது மஞ்சள் நிறமானது. கல்லீரல், மண்ணீரல், நரம்பு மண்டலம் என்பவற்றையும், கணையம் எனும் நாளமில்லாச் சுரப்பியையும் கட்டுப்படுத்துவதுடன், இவை தொடர்பான குறைபாடுகளையும் ஏற்படுத்துகின்றது.

04. அனாஹதம், சுக்கிரனின் இயக்கத்திற்கு உட்பட்ட இச் சக்கரம் பச்சை  நிறமுடையது. இரத்தம், இரத்த ஓட்ட மண்டலம், போன்றவற்றையும், தைமஸ் எனும் நாளமில்லாச் சுரப்பியையும் கட்டுப்படுத்துவதுடன,; இவற்றின் பாதிப்புக்களையும் தோற்றிவிக்கின்றது.

05. விசுத்தி, இதற்கான கிரகம் வியாழன். இதன் நிறம் நீலம். மூச்சுக்குழல், குரல்நாண், நுரையீரல், வயிறு, குடல் ஆகியவை இதனால் இயக்கப்படுகின்றன. தைராய்டு எனும் சுரப்பியும் இதனுடன் இணைகின்றது. இவற்றின் பாதிப்புக்களுக்கும் காரணமாக அமைகின்றது.

06. ஆக்ஞை, சனிக்கிரகத்திpன் இயக்கத்திற்கு உட்பட்ட இது கருநீல நிறமுடையது. இடதுகண். மூக்கு, காதுகள், நரம்பு மண்டலம். ஆகியவற்றையும் பிட்யூட்டரி சுரப்பியையும் கட்டுப்படுத்துவதோடு, அவற்றில் பாதிப்புக்களையும் ஏற்படுத்துகின்றது.

07. சகஸ்ராதாரம், கேதுவின் இயக்கத்திற்கு உட்பட்ட இச்சக்ரம் ஊதா நிறமுடையது. மூளையின் மேற்பகுதி, வலது கண் ஆகியவற்றையும் பீனியல் எனும் சுரப்பியையும் கட்டுப்படுத்துகின்றது.

இவ்வாறான ஏழு ஆதாரங்களுடன் எமது புருவத்தின் மத்தியில் ‘மூன்றாவது கண்’ என்றழைக்கப்படும் சோமச் சக்கரம் காணப்படுகின்றது. இது இராகுவினால் இயக்கப்படுவது.

சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் காணப்பட்ட போதிலும், அவை அனைத்தும் ஒன்றாய் இணைந்து விளங்குவதைப்போல, மனித உடலில் காணப்படும் இவ் ஆதாரங்கள் அனைத்தும், வெவ்வேறாகக் காணப்பட்ட போதிலும், அவை அனைத்தும் ஒன்றித்து இணைவதே உத்தமமான செயற்பாட்டினைக் காட்டுவதாக அமைகின்றது.

செவ்வாய், 3 மே, 2011

சக்தி தத்துவம்

சைவசித்தாந்தம் நிலைநிறுத்திக் கூறும்  பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களில் உண்மையில் முதன்மை பெற்றதாகவும் அனைத்திலும்  மேன்மையானதாகவும் விளங்குவது பதிக் கொள்கையாகும். இவ்வாறு விளங்கும் பதிக் கொள்கையில் சக்திக்குத் தனிச்சிறப்பு உண்டு. சைவசித்தாந்தத்தில் இறையருள் எனப்படும் திருவருளே சக்தி எனப்படுகின்றது. அந்த வகையில் இச் சக்தியைப் பெண்ணாகக் கொள்வது சித்தாந்தத்தின் மரபாகும். அதனாலேயே சித்தாந்த மரபில் இறைவனின் திருவருட் சக்திகளாக உமை, கௌரி, காளி, பிராஹ்மி, மஹேஷ்வரி… முதலான பல பெண் சக்திகள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றன. தத்துவம் என்ற சொல்லுக்கு உண்மை என்பது பொருளாகும். இதனால் சக்தியின் உண்மைத் தன்மை பற்றிய சிந்தனையாக சக்தி தத்துவம் என்பதைக் கொள்ளலாம். ‘சுத்த தத்துவங்களுள் ஒன்றாய்ச் சிவனது கிரியாசக்திக்கு இடமாக சுத்தமாயை காரியப்படுவதாயுள்ள விருத்தியே சக்தி தத்துவம்’ என்றும் கூறுவர் அறிஞர்.

சிவம், சக்தி என்பன இரண்டு சொற்களாக இருந்தாலும், சித்தாந்த நோக்கில் இவை இரண்டும் சிவ பரம்பொருளை இரு நிலைகளில் குறிப்பதாக அமைகின்றது. ஒன்றிலும் தோய்வின்றிச் சுயம்பிரகாசமாய் நிற்கும் நிலையில் பரம்பொருளை ‘சிவம்’ என்றும், அதே சிவம் உயிர்களுக்குப் பொதுவகையில் உதவி செய்ய முற்படுகையில் ‘சக்தி’ எனப் பெயர் பெறுகின்றது. எனவே, உயிர்களுக்கு உதவும் முதல்வனது உருவத்திருமேனி அருள்வடிவம் என்பது சித்தாந்திகளின் கருத்தாகும்.

திருவருள் எனப்படும் சக்தியும் அதன் கூறுகளுமே இறைவனுக்குக் குணமும், சொரூபமும் மற்றும் உடம்பு, இடம், ஆடை, அணி முதலியனவும் ஆகும்.

சைவசித்தாந்தம் இறைவனின் சக்தியை அருள் என்று குறிப்பிடுகின்றது. அருள் என்ற சொல் மிகவும் ஆழமான பொருளைக் கொண்டது. ஆன்மாக்களின் பக்குவ நிலைக்கேற்றவாறும், பயன்படு தன்மைக்கேற்பவும் கொண்டு இறைவனிடத்திலுள்ள பிரிவற்ற இயல்பாகிய கருணையாக விளக்கி அதனை அருட்சக்தி என்கின்றனர். இச் சக்தி சிவனுக்கு அபின்னமாய் இருப்பது. சித் சக்தி என்றும் இதன அழைப்பர். சித் என்பது ஞானம். எனவே, சித்சக்தி என்பது ஞானசக்தி எனப்பொருள் கொள்ளப்படும்.

இறைவன் தானே நேரில் நின்று ஐந்தொழில்களை இயற்றாமல், தன் ஆற்றலாகிய சக்தியின் துணைக் கொண்டே இவற்றை இயற்றுகின்றான். தன் நிலையில் எவ்வித விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவன், ஞானமே வடிவாகியவன். இவன், உயிர்கள் ஆணவ மறைப்பிற்கு உள்ளாகி இருப்பதால், அவற்றிற்கு அறிவு விளக்கம் செய்யும் பொருட்டு தன் நிலையிலிருந்தும் கீழிறங்கி வரவேண்டியுள்ளது. எனவே, தன் நிலையில் எவ்விதக் குறையும் ஏற்படாமல் ஐந்தொழிலைச் செய்தற்காய் தான் நேரடியாக நின்று இவற்றைச் செய்யாமல், தன் குணமாகிய அருளைக் கொண்டு செய்கின்றான். இதனை அப்பர் சுவாமிகள்,

“மன்னும் மலைமகள் கையால் வருடின மாமறைகள்”

என்கின்றார். இதனையே சித்தாந்திகளின்பால், திருக்களிற்றுப் படியார்,


“தாரத்தோடு ஒன்றாவர் தாரத்துஓர் கூறாவர்
தாரத்தோடு எங்கும் தலைநிற்பர் – தாரத்தின்
நாதாந்தத் தேஇருப்பர் நல்தானத் தேஇருப்பர்
வேதாந்தத் தேஇருப்பர் வேறு”


சிவனும் சக்தியும் உயிர்கள் உய்வதற்காகப் படைத்தலின்போது நாயகன் நாயகியாக ஒன்றுபட்டிருப்பர். உயிர்கள் ஆண், பெண்ணாகி வாழ்வதற்கு முன் தாமே மங்கைமங்கனாக (அர்த்தநாரீஸ்வரக் கோலத்தில்) இருப்பர். உயிர்களுக்கு மலசம்பந்தம் நீக்குவதற்காக தத்துவங்களைத் தன் சக்தியினால் உருவாக்கி அவற்றைத் தொழிற்படுத்த அவற்றுக்கு மேம்பட்டு நிற்பர். இந் நிலையில் சக்தியானவள் தத்துவங்களிற்குச் சார்பாக நிற்பாள். வினைகளால் களைத்த உயிர்களுக்கு இளைப்பாற்றல் செய்வதற்காக விந்து என்ற சக்தியாகவும், நாதம் என்ற சிவமாகவும் நிற்பர். அவ்வாறே வேள்வி பூஜைகளிலும், தியானம் செய்யும் இடங்கள் ஆகியவற்றிலும் ஆறாதாரங்களிலும் என எங்கிலுமே சக்தியோடே சிவன் இருப்பார். ஈற்றில் வீடுபேறு அருளுவதற்காக வேதத்தைப் பற்றி அதன் நாத முடிவிலே இருப்பார்; என்கின்றது.


இதனைச் சித்தாந்திகள் விளக்குமிடத்து, சிவ பராக்கிரம் எனும் பஞ்ச கிருத்தியத் தொழிலை இறைவன் ஆன்மாக்களின் பொருட்டு நிகழ்த்துதற்கு உமையே காரணமாக அமைகின்றாள். அதாவது, ஆன்மாக்களை அநாதியாகத் தொடர்ந்துள்ள பாசத்தைப் போக்கி, அவை முக்தியடைதற் பொருட்டு அருள்வடிவமாகிய அம்மையார், அடியார்களுக்குப் பஞ்சாக்கர வடிவமாகிய ஆனந்தத் திருநடனத்தை இறைவனின் இடப்பாகத்திலிருந்து தரிசிப்பார் என்பர்.

வெள்ளி, 16 ஜூலை, 2010

பிராமணன் யார்?

இந்து மதம் எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கும் மேலாக நிலைபெற்று வரும் மதம். உலக மதங்கள் யாவற்றிலும் தனித்துவமும் சிறப்பும் வாய்ந்த தனிப் பெரும் மதம். இது வரலாற்றில் யாரால், எப்போது, எங்கே தோற்றுவிக்கப்பட்டது என்பது இன்றுவரை எந்த விஞ்ஞானியாலோ மெய்ஞ்ஞானியாலோ கூடக் கண்டறிந்து சொல்லப்படவில்லை. இதனையும் விட சவால்களையும், கேலிப் பேச்சுக்களையும் தாங்கி மௌனமாகவும், பொறுமையாகவும் அவற்றையெல்லாம் எதிர்த்தும் நின்று வருகின்ற பெரும் மதமாக திகழ்கின்றது.

சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் அடியொற்றி வரும் இந்து மதத்தின் புராதனமான கோட்பாடுகள் வெறும் வாய்ப் பேச்சுடன் நின்று விடாமல் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றது. இந் நிலையில் இந்து மதத்தின் எண்ணங்கள் சிந்தனைகள் என்பன வலுப்பெறவும், சீர்படுத்திச் செல்லப்படுதற்கும் இதனூடு காணப்படுகின்ற வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தர்ம சாஸ்திரங்கள் எனப் பலவும் பெரும் பங்காற்றி வருகின்றன. இவற்றிலே கூறப்பட்ட கருத்துக்களே இந்து மதம் என்பது உலகறிந்த உண்மை.

வேதகாலத்தின் தோற்றம் என்பது ஆரியரது வருகையினால் ஏற்பட்டது. அது இயற்கை ஒழுங்கோடு இருந்த திராவிடர்களின் வழிபாடுகளைத் தகர்த்தெறிந்து தேவர்கள் என்ற நிலையில் மனிதப் பண்புகளையும், அதீத ஆற்றல்களையும் அவர்கட்டு வழங்கி பெரும் தெய்வங்களாக அவர்களை வகைப்படுத்திக் காட்டியது. இத்தகைய நிலையில் ஆரிய கலாசாரம் இந்துப் பாரம்பரியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள திராவிடர்களைத் தமக்கு அடிமைப்படுத்திக் கொண்ட இவர்கள் தாம் காட்டிய நெறியிலேயே அவர்களையும் செயற்படச் செய்தனர். தவிர மீறுபவர்களை ஒதுக்கப்பட்டவர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்களாகவும் கூட அமைத்துக் கொண்டார்கள்.

இத்தகைய ஆரியக் குழுவில் இருந்தவர்களில் தனித் தன்மையுடையவர்கள் தம்மை அனைவரிலும் உயர்ந்தோராக, தம்மிடையே அதீத ஆற்றல், தெய்வீகப் பண்பு உள்ளதாகக் காட்டிக் கொள்ளத் தலைப்பட்டனர். திராவிடர்களின் உருவ வழிபாடுகளைச் சிதைத்து தேவ வழிபாடுகளைக் கொணர்ந்தனர். சமஸ்கிருதம் எனும் வடமொழிப் பாவனையை உறுதிப்படுத்தினர்.

இது சுதேசிய கூட்டத்தவரிடையே பெரும் சலசலப்பையும் மோதல்நிலைகளையும் தோற்றுவிக்கத் தலைப்பட்டது. இதனால், புனிதமானவை எனக் கருதப்பட்ட வேதங்களையும் உபநிடதங்கள் முதலியவற்றையும் தமக்கு மட்டுமே உரியவையாகக் கொண்டு இரகசியமாக போதித்து வந்தனர். இவைகளை ஏனையோருக்குச் செல்லக் கூடாது என்ற நோக்கில் வாய்மொழிக் கல்வியாக பேணி வந்தனர். எனவே தாமே பிரம்மத்தை உணர்ந்தவர் என்ற நோக்கில் தம்மை பிராமணண் - பிரம்மத்தை அறிந்தவன் எனக் கருதினர்.

வேதங்களும், தர்ம சாஸ்திரங்களும் - குறிப்பாக 'மனுதர்ம சாஸ்திரம்' அக்கால சமூக அமைப்பில் நால்வகை வர்ணங்களைத் தோற்றுவித்தது. வர்ணப் பாகுபாடு என்பது மக்கள் தத்தம் கடைமைகளைச் சரிவரச் செய்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக அமைந்தது. இது அவரவர் தகுதியை வைத்தே தீர்மானிக்கப்பட்டது. அதாவது, பிரம்மத்தை அறிந்தவன் - அதாவது வேதங்களை கற்பவன் பிராமணன் எனவும்; வலிமையுடையவன் மக்களைக் காக்கும் தன்மை பொருந்தியவன் ஷத்ரியன் என்றும்; வணிகம், வியாபாரம் முதலியன செய்து சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்த விளைபவன் வைஷிகன் என்றும்; முன்சொன்ன மூவர்க்கும் ஏவல் செய்து அவர்களைக் காப்பவன் சூத்திரன் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் வேள்வியில் பலியிடப்பட்ட வேத புருடனின் முறையே சிரசு - அறிவின் இருப்பிடம்; மார்பு/தோள் - வலிமை, வீரத்தின் சின்னம்; வயிறு - பசியின் ஆதாரம்; கால்கள் - உடலாகிய முதல் மூன்று வர்ணத்தையும் தாங்கும் ஆதாரம் என்பவற்றிலிருந்து தோன்றியவர்களாகக் கருதப்பட்டனர்.

இந் நிலையில் பிராமணர்கள் தம்மை உயர்ந்தவர்கள் எனக் கருதி மற்றோரிலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டத் தொடங்கினர். பிட்ஷை எடுத்தே தமது அன்றாட ஜீவனோபாயத்தை நிறைவுசெய்துகொண்ட பிரம்மச்சாரிகள் - குருகுலத்தில் வேதம் பயின்றவர்கள், ஒரு நாளைக்கு ஐந்து வீடுகளுக்கு மேல் சென்று பிட்ஷை பெறக் கூடாது என்பது அக்காலத்தில் விதியாக இருந்தது. ஆனால் பிரம்மச்சாரிகள் தவிர துறவிகள், வறியோர், அனாதைகள் எனப் பலரும் கூட அக்காலத்தில் பிட்ஷை எடுத்துண்ணும் வழக்கம் உடையவர்களாய் இருந்தமையினால் வீடுகளுக்கு பிட்ஷைபெற வருபவரில் பிரம்மச்சாரிகள் யார் என்பதை அறந்து கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இதனால், பிரம்மச்சாரிகளுக்கென்று தனியான ஓர் அடையாளம் வேண்டும் என்பதை உணர்ந்து பூணூல் அணியும் வழக்கத்தைக் கொண்டு வந்தனர். பின்னர் தம்மைத் தனிச் சமூகமாகக் காட்டிக் கொண்ட இவர்கள் அப் பூணூலையே தம் சமூகத்தின் சின்னமாகவும் அமைத்துக் கொண்டனர். தொழிலை அடிப்படையாகக் கொண்டமைந்த வர்ணப் பாகுபாட்டினை, பிறப்பினை அடிப்படையாகக் கொண்டதாக ஆக்கிக் கொண்டார்கள். இதுவே பிற்கால சமூகத்தில் ஏற்பட்ட பாரிய சீர்கேடுகளுக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.

இதனைக் கருத்திற் கொண்டு, பிராமணர் என்று தம்மை சிறப்பித்துப் பேசிய இக் கூட்டத்தவரினை ஒழுக்குநெறிப்படுத்தத் தலைப்பட்டதாக ஆகமங்கள் தோன்றின. இவை, தீட்ஷை என்பதைக் கொணர்ந்தன. ஒருவன் எத்தகையவனாய் இருந்தாலும், எப்பேர்ப்பட்ட வேத சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவனாய் இருந்தாலும், இறைவனுக்குச் செய்ய வேண்டுமாயின், அவன் தீட்ஷை பெற்றிருக்க வேண்டும் என்று பகர்ந்தன. தீட்ஷை என்பது பல்வெறு கட்டுப்பாடுகளைக் கொண்டதாக மனதையும், உடலையும் தூய்மைப்படுத்தும் நோக்கில் அமைந்தது.

இத்தகைய ஆகமங்களின் வருகையானது, பிராமணர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டிருந்தது. அதாவது, வேத வேள்விகளில் பசுக்களையும், குதிரையையும் பலிகொடுத்து அவற்றின் இறைச்சிகளை உண்டும், 'சோமபாணம்' என்ற பெயரால் போதை தரும் கள்ளையும் சாராயத்தையும் அருந்தி வந்த இவர்கள், இத்தகைய ஆசாரங்களைக் கண்டு கதிகலங்கிப் போயினர். இவை வெளிவந்தால், தம் குலத்திற்கே ஆபத்து வந்துவிடும்; என்று அஞ்சி, ஆகமங்களை யாரும் அறியாதபடி ஒளிக்கத் தொடங்கினர். சமயத்தில் அழிக்கவும் தொடங்கினர். ஆனாலும், சில நல்ல உள்ளம் படைத்தோரின் முயற்சிளால் ஆகமங்களுட் சில பாதுகாக்கப்பட்டன. இவற்றை மின் பகுப்பாக்கம் செய்யும் முயற்சியில் வேதாத்ரி மஹரிஷியின் ஹிமாலயன் அகாடமி என்ற அமைப்பு ஈடுபட்டு வருகின்றது.

இதனாலேயே, காலத்திற்கும் பிராமணர்களை அனைவரும் எதிர்த்து வந்திருந்தமை அறியமுடிகின்றது. முன்சொன்னவாறு "மாமிசம் உண்டு கள்ளும் அருந்தி போலிவேடதாரிகளாய் இருந்த பிராமணர்களை சைவபோசணிகளாக மாற்றியவர்கள் சமண மதத்தவர்களே" என்றால் அது மிகச் சரியாகும். சமணர்களும் பௌத்தர்களும் உயிர்க்கொலையைக் கண்டித்து வந்ததுடன் தாவர உணவுகளையே உண்பதற்கு ஏற்றவையாகக் கூறியிருந்தமை, சமய விவாதங்களின் போதும், கண்டனங்களின் போதும் பிராமணரின் நிலையை அறியச் செய்தது. இதன் பின்னரே இக் கூட்டத்தவர் சைவ போசணிகளாக மாறத் தொடங்கினர்.

ஆனால், இன்றும் எத்தனையோ பிராமணர்கள் தம் பழைமை மாறாமல் மாமிசம் உண்பதையும், மது அருந்துவதையும் கைக்கொண்டு வருகின்றார்கள் என்பது ஒவ்வொரு இந்துவும் அறிந்த உண்மையாகும். இதை மறுப்பதற்கு எவருமில்லை.

வெள்ளி, 29 ஜனவரி, 2010

இன்னும் வெளிவராத இரகசியங்கள்

இந்து மதம் எத்தனையோ அற்புதங்களைத் தன்னூடு கொண்டு விளங்கும் ஓர் ஆழப் பெரும் சமுத்திரம். அது இன்னமும் யாராலும் கண்டறியப்படாத எத்தனையோ ஆழ்ந்த இரகசியங்களையும், இன்னும் மறைபொருட்களையும் கொண்டு விளங்குகின்றது.

எண்ணுதற்கு சித்தமாய், அரிதாய், அணுவிலும் சிறிதாய், ஆழப் பெரிதாய் அதிகமாய், நுண்மையாய், எளிதாய், கடிதிலும் கடிதாய் இன்னும் எத்தனையோ வகையினதாய் விளங்குகின்றது.

இதையெல்லாம் கண்டறிவதற்கு எத்தனை பேர் முயன்று வந்தாலும், அது எட்டாக் கனியாகவே உள்ளது. இத்தனையையும் முடிந்தவரை ஓரளவேனும் அறிந்து கொள்ள முயல்வதற்காக விருப்பங்கொண்டு செயற்படுமாறு ஆர்வலர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.